Saturday, July 31, 2010

"நம்பிக்கையுடன் " என்ற புத்தகத்தில் இருந்து ...

சில பக்கங்கள் ..."நம்பிக்கையுடன் " என்ற புத்தகத்தில் இருந்து ..

" தோல்வி என்பது

சிந்திக்கத் தெரியாதவனின்

சித்தாந்தம்....

நிலவை தொட்டது

மூன்று தோல்விகளுக்கு

பிறகு தான் ".....


"சதா யோசி

மூளை ஒரு மிருகம்

தீனி போட்டுக் கொண்டே

இருக்க வேண்டும் ..

இல்லாவிட்டால் அது

தீயதைத் தின்று விடும் "


"உலகை

உலுக்கி உலுக்கி

எடுத்தவனெல்லாம்

துவக்கத்தில் ஒரு

தூசுப் படலமாக

இருந்தவன் தான் "


" ஒன்றைக் கவனித்துக்கொள்

இறங்கிப் போவதால்

என்றுமே நாம்

தாழ்ந்து போக மாட்டோம்


பள்ளத்தில் நதி

இறங்கிப் போகிறது

அதனால் அது மேடுகளில்

அசாதாரணமாகப்

பாய்கிறது "


" செய்ய நினைப்பதே

செய்வதினுடைய

பாதி வெற்றி தான்

எடுக்கும் முடிவை

உடனே செயல்படு

முடியும் -முடிவும்

போகப்போக

நரைத்துப் போகக் கூடியவை ..."


நன்றி : Abdul Hakim.S

Monday, July 26, 2010

உரிமையின் பரிசாகக் கிடைத்த கறுப்பு யூலை 1983…!

உரிமையின் பரிசாகக் கிடைத்த கறுப்பு யூலை 1983…!

dd

மரணங்கள் மலிந்தமண்ணில்
உடலங்கள் எரிந்துபோக
அவலங்கள் நிறைந்தவாழ்வாய்
தினம்தினம்…
தொடர்கிறது கறுப்பு யூலை

புதைகுழி வயல்கள் நீண்டுசெல்ல…
துயரங்கள் சுமந்துகொண்டு
தொடரும் காயங்களுக்கு நடுவில்
நாளைய பொழுதின்
விடிவுக்காக ஏங்கும்
ஒரு இனமாகத்தான் இன்றும் தமிழ்…!

நீதி
என்றைக்கோ செத்துப்போனது
மனிதனேயம்
எப்போதோ தொலைந்துபோனது
அன்றில் இருந்து…
நியாயத்தின் அர்த்தம்
என்னவென்றே தெரியாத ஆட்சியில்
இன்றுவரை…
தொடர்கிறது கறுப்பு யூலை

தொப்புள்கொடி உறவுகளின்
தலைகள் அறுபட்டு
உடல்வேறு தலைவேறாய்
தூக்கி எறியப்படும்

பிஞ்சுகளின் உடலங்களில்
தோட்டாக்களால்…
துளைகள் இடப்பட்டு
தூக்கில் இடப்படும்

தாய்குலத்தின்
உயிரிலும் மேலான கற்ப்பு
களவாடப்பட்டு உடல்மட்டும்
வீதியில் வீசப்பட்டிருக்கும்

மரணங்கள் மலிந்தமண்ணில்
உடலங்கள் எரிந்துபோக
அவலங்கள் நிறைந்தவாழ்வாய்
தினம்தினம்…
தொடர்கிறது கறுப்பு யூலை

அமைதியின் பரிசாக மரணம்
அகிம்சையின் பரிசாக மரணம்
பொறுமையின் பரிசாக மரணம்
உரிமையின் பரிசாகக்கூட மரணம்

தவறேதும் இல்லாத
தண்டணைகளாக…
மனிதப்புதைகுழிகள்
வங்காலைத் துயரங்கள்
அல்லைப்பிட்டி அவலங்கள்
இன்னும் சொல்லமுடியாத சோகங்களாய்
இன்றும் தொடர்கிறது கறுப்பு யூலை

வாழ்க்கைபற்றி
எதுவுமே அறியாத பிஞ்சு
வாழவென்று…
நேற்றுப்பிறந்து இன்று மடிந்துபோகும்

எதிர்காலக் கனவுகளோடு
எங்களின் நாளைய தலைவர்கள்
இன்றைய சிறுவர்களாய்
பலியாகிப்போவார்
பத்தோடு பதினொன்றாய்…!

வாழ்வதற்கு ஏங்குகின்ற
ஒரு இனம்
கலையும் பண்பாடும்
மிகநீண்ட வரலாறும்
சொந்தமாகக்கொண்ட ஓர் இனம்
சர்வாதிகார அரசின் இரும்புக்கரங்களால்
நசுக்கப்பட்டு…
பூவும் பிஞ்சுகளுமாய்
தாயும் குஞ்சுகளுமாய்
இன்றும் தொடர்கிறது கறுப்பு யூலை

புதைகுழி வயல்கள் நீண்டுசெல்ல…
துயரங்கள் சுமந்துகொண்டு
தொடரும் காயங்களுக்கு நடுவில்
நாளைய பொழுதின்
விடிவுக்காக ஏங்கும்
ஒரு இனமாகத்தான்
இன்றும் நாங்கள்…!

இருப்பினும்…
எவராலும் அழிக்கமுடியாத இனமாய்
பல்லாயிரக்கணக்கில்
வேர் ஊன்றி விழுதெறிந்து
பாரெங்கும் பரவியிருக்கிறோம்…!

காயம்பட்டு…
இரத்தக்கறைபடிந்த
எங்கள் உறவுகளின்
கன்னத்தைத்துடைத்து அணைத்திடவே
நாங்கள் இங்கு இருக்கிறோம்…!

பாசங்கள் அறுபட்டு
எங்கேயோ தொலைந்துபோன
உறவுகள் அல்ல நாங்கள்…!

தொலைவினில் இருந்தாலும்
தொப்புள்கொடி அறுபடாத
குழந்தைகளாய்த்தான் நாங்கள்
இங்கு இருக்கிறோம்.

இந்த…
தொப்புள்கொடி உறவு இன்னும் நீழும்
அகலங்கள் இன்னும் விரியும்
இன்றைய
மரணத்தின்வாழ்வு மறையும்வரை
நாளை…
“கறுப்பு யூலை” மரணங்கள் முடியும்வரை

Friday, July 2, 2010

இந்தியா அழுத்தம் கொடுத்தால், மஹிந்த மாறலாம்! - கேணல்.ஹரிஹரன்

இந்தியா அழுத்தம் கொடுத்தால், மஹிந்த மாறலாம்! - கேணல்.ஹரிஹரன்

Written by Sara
Wednesday, 30 June 2010 10:23

தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக அரசியல் கோரிக்கைகளை உடனடியாக செயல்பாடாக்க, சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விரும்பமாட்டார், இந்தியாவின் நேர் முகமானது அழுத்தங்களை அதிகரித்தால், சிறிது சாத்தியமாகும் என இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி கேணல் ஆர். ஹரிஹரன் தெரிவித்துள்ளார். அவர் 'ஈழநேசன் நியூஸ்' இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் வழங்கிய நீண்ட செவ்வி வருமாறு:

1) சிறிலங்காவின் போர் முடிவுற்று ஒரு வருடமாகியுள்ளநிலையில் மாநகரசபை தேர்தல், ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை தாண்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமோசனமளிக்கும் உண்மையான அரசியல் மாற்றம் இடம்பெற்றுள்ளதா? ஆம். எனின் அதனை சற்று விளக்குவீர்களா?

இதற்கு என்னால் ஆம் அல்லது இல்லை என விடையளிக்க முடியாது. இதை சற்று ஆய்ந்து பார்க்க வேண்டும். இலங்கை அரசு ராஜபக்ச தலைமையில் தற்போது தேர்தல் வெற்றிகளுக்குப் பின் வலிமையாய் அமைந்துள்ளது. ஆனால் அதே சமயத்தில் வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளும் அவர்களைச் சார்ந்த புலம் பெயர்ந்த மக்களும் இயக்கத்துக்கு ஏற்பட்ட அழிப்பின் பிறகு மனங்குன்றி தளர்ச்சியடைந்துள்ளனர். அவர்களிடையே உட்பூசல் இன்னும் ஓய்ந்த பாடில்லை.

அதுபோலவே புலம் பெயர்ந்த தமிழர்களும் நவக்கிரக நாயகர்களாக எட்டு திக்கையும் நோக்கி நின்று செயல் படுகின்றனர். இலங்கைத் தமிழ் அரசியல் வாதிகள் ராஜபக்சவின் ராஜதந்திர பகடைக் காய்களாய் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களிடையே ஒருங்கிணைந்த குறிக்கோளோ செயல்பாடோ எப்போதுமே தோன்றாமல் போகலாம். ஆக ஒட்டு மொத்தமாகத் இலங்கைத் தமிழ் மக்கள் அரசியல் செல்வாக்கை இழுந்து நிற்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் ராஜபக்சவுக்கு தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக அரசியல் கோரிக்கைகளை உடனடியாக செயல்பாடாக்க உந்துதல் எதுவும் இல்லை. இருந்தாலும் சர்வதேசச் சூழ்நிலை மற்றும் இந்தியாவின் நேர்முகமான தமது அழுத்தங்களை அதிகரித்தால் அவருடைய செயல் பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும். அப்படி இருந்தாலும் ராஜபக்ச அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப சிறிது சிறிதாகத்தான் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளைத் தனக்குச் சாதகமான நிலைபாட்டில் செயல்படுத்துவார் என்பது என் கணிப்பு.

2) சிறிலங்காவில் நடைபெற்று முடிந்த போர் உண்மையிலேயே எதிர்பார்த்த பெறுபேற்றை சர்வதேச சமூகத்துக்கு தந்துள்ளதா?

சர்வதேச சமூகத்துக்கு இலங்கைப் போரைப் பற்றிய பெரிய எதிர்பார்ப்புக்கள் இருந்ததாகத் தெரியவில்லை. அல் கயிதா அமெரிக்காவில் தொடுத்த தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பின் உலகச் சூழ்நிலையில் பொதுவாக எந்த தனிப்பட்ட விடுதலை இயக்கமும் தீவிர அல்லது பயங்கர வாத அணுகுமுறைகளை பாவிக்க பெரும்பாலான நாடுகள் அனுமதிக்கத் தயாராக இல்லை.

(இதற்கு மாறாக சோவியத்யூனியனுடன் அமெரிக்கா நடத்திய பனிப்போர் சூழ்நிலை விடுதலை இயக்கங்களுக்கு சாதகமாக இருந்தது என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். அந்த உலகச் சூழ் நிலை மீண்டும் தோன்றாது.)

ஆகவே உலக நாடுகள் விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும் பொதுவாக பயங்கரவாதக் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்கள். பார்த்தும் வருகிறார்கள். நோர்வே போன்ற நாடுகள் ஓரளவு நடுநிலைப் பார்வையோடு செயல்பட்டாலும் அவர்களும் தற்போது ஒதுங்கியே நிற்கிறார்கள். ஆகவே அமெரிக்கத் தலைமையிலான பயங்கரவாதத்தை எதிர்த்த போர் ஆப்கானிஸ்தானில் முடிந்தாலும் அத்தகைய சூழ்நிலை மாறும் என்று எனக்குத் தோன்றவில்லை.

ஆனால் அதே நேரத்தில் உலகளவில் மனித நேய மேம்பாட்டுக்கும் மனிதர்களின் அடிப்படை உரிமைகளை முன்வைத்து நடக்கும் அரசியல் அல்லது மக்களின் போராட்டங்களுக்கு உதவ முன்பைவிட பலமான சக்திகள் உருவாகி வருகின்றன. இவை அத்தகைய போராட்டங்களுக்கு சர்வதேச அளவில் பல்வேறு வழிகளில் உதவக்கூடும்.

ராஜபக்சவுக்கு தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயக அரசியல் கோரிக்கைகளை உடனடியாக செயல்பாடாக்குவதற்கு உந்துதல் எதுவும் இல்லை

3) சிறிலங்காவின் போர் இடம்பெற்ற முறை குறித்து உங்கள் விமர்சனம் என்ன?

நான் ஒரு ராணுவ ஆய்வாளன் என்ற முறையிலேயே என் கருத்துக்களை முன்வைக்க விரும்பிகிறேன்.

விடுதலைப் புலிகள் கடந்த முப்பதாண்டுக் காலத்தில் நான்கு ஈழப் போர்களை நடத்தினார்கள். ஆனால் சென்ற ஆண்டு முடிந்த கடைசி ஈழப்போர் முன்பு நிகழ்ந்த ஈழப்போர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இம்முறை விடுதலைப் புலிகள் தங்களுடைய அடிப்படைப் பலமான கெரில்லா (கொரில்லா என்பது மனிதக் குரங்கு) போர் தந்திரங்களைக் குறைத்து சீருடையணிந்த வழமையான போர்ப்படைகளையும் முறைகளையும் நம்பியிருந்தனர். இது போர் சித்தாந்தங்களின் அடிப்படையில் ஒரு பெரிய தவறு. அவர்கள் தோல்விக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன;

1. கிழக்கு மாகாணத்தில் கருணாவின் பிரிவுக்குப்பின் புலிகளின் படைக்குத் தேவையான ஆள் சேர்ப்பு கடினமாயிற்று. ஆகவே இலங்கைப் படைகளை எதிர்க்க அடிப்படையான படைபலம் போதாமல் போயிற்று.

2. இலங்கை ராணுவம் ஜெனரல் பொன்சேகா தலைமையில் தனது பழைய செயல் முறைகளில் இருந்த தவறுகளைத் திருத்த முழு முயற்சிகளை மேற்கொண்டது. அதன் விளைவாக படை பலத்தை அதிகரித்து போரின் உக்கிரத்தை அதிகரிக்க உதவும் பீரங்கி மற்றும் ராக்கெட் படைகளையும் தீவிரப்படுத்தியது. ராணுவத்துடன் ஒருங்கிணைந்து செயல் படும் முறைகளை விமான மற்றும் கடற்படைகள் சீராக்கின.

3. பிராபகரன் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்பு குலைந்த இந்தியாவுடனான உறவை சீர்படுத்த முயலவில்லை. அவர் இந்தியாவில் இருந்த சில தமிழ் அரசியல்வாதிகளின் செல்வாக்கை ஓரளவு நம்பியிருந்திருக்கலாம்.

4. உலகளவில் 32 நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்தன. ஆகவே புலம் பெயர்ந்த தமிழர்களிடையே விடுதலைப் புலிகள் அமைத்த பலம் வாய்ந்த உதவித்தளங்கள் முழுமையாக இயங்க முடியாமல் செய்யப்பட்டன.

ஆகவே முன்பை விட விடுதலைப் புலிகளின் தங்கள் கடைசிப் போரைப் பல பெருத்த இன்னல்களுக்கிடையே நடத்தினார்கள். அதே நேரத்தில் ராஜபக்ச விடுதலைப்புலிகளின் அழிப்பையே முதற் குறிக்கோளாக நாட்டுக்கு வைத்துப் போர் தொடுத்தார். அதற்கான அரசியல் மற்றும் அரசாங்க செயல்பாட்டுகளை ஒருங்கிணைந்து செயல்படுத்தினார். ஆகவே போரின் முடிவு ராணுவ செயல் பாடுகளின் படி ஓரளவு வியப்பளிக்கவில்லை. ஆனால் சாதாரண மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்புக்கள்தான் வியப்பும் விசனமும் அளித்தன.

4) சிறிலங்காவில் இடம்பெற்றபோரின்போது, இந்தியாவின் பங்களிப்பு உங்களுக்கு தெரிந்தவரையில் என்ன?

இந்தியா நேரடி ராணுவ உதவியைத் தவிர்த்தது. அது அளித்த சில ஆயுதங்களோ அல்லது போர் உபகரணங்களோ போரில் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தவில்லை. ஆனால் மறைமுகமாகப் பல்வேறு விதங்களில் இலங்கைக்குப் போரின்போது இந்தியா உதவியது.

(புலிகளின் பிரசாரத்துக்கு மாறாக இந்தியா முக்கியமான யுத்த தளவாடங்களை அளிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் சீனா அளித்த உதவியாகும். சீன ஆயுதங்கள் ஏற்கனவே இலங்கை ராணுவத்தில் இயங்கி வருபவை.)

இந்தியா அளித்த உதவிகளில் முக்கியமான சில, விடுதலைப் புலிகளின் பன்னாட்டு யுத்த தளவாட பரிவர்த்தனைகளைப் பற்றிய உளவை இலங்கையுடன் பகிர்ந்து கொண்டது,

தமிழ் நாட்டில் போர் நடந்த காலத்தில் அரசியல் முடிவுகளை தமிழக அரசின் முழு ஒத்துழைப்புடன் செயல்பாட்டில் கொண்டுவந்து தமிழ் நாட்டிலிருந்து விடுதலைப் புலிகளின் தேவைகளைப் போகாமல் தவிர்த்தது,

மேலும் சர்வதேச அளவில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசாமல் இருந்தது.(இதற்கு இலங்கையைவிட கொள்கையளவில் இந்தியா அந்த விவகாரத்தில் எந்த நாட்டிலும் பன்னாட்டுத் தலையீடு கூடாது என்று நம்புவதே காரணம்.)

போரின்போது ஜெனிவாவில் இலங்கையின் பிரதிநிதியாக செயல்பட்ட டாக்டர் டயான் ஜெயதிலக இந்தியா தனது உலகளவில் உள்ள செல்வாக்கை இலங்கைக்கு ஆதரவு திரட்ட மறைமுகமாச் செயல்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். இது உண்மை என நான் நம்புகிறேன். .

முன்பை விட விடுதலைப் புலிகளின் தங்கள் கடைசிப் போரைப் பல பெருத்த இன்னல்களுக்கிடையே நடத்தினார்கள்

5) சிறிலங்காவுக்கு எதிரான போர்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உங்களது கருத்து என்ன? சிறிலங்காவின் போர்க்குற்றம் குறித்த சர்வதேசத்தின் நிலைப்பாடு எதிர்காலத்தில் என்ன வகையாக அமையும்? அதில் இந்தியாவின் வகிபாகம் எதுவாக இருக்கும்?

போரின் அடிப்படை முறைகளில் மனித உரிமை மீறல்கள் தவிர்க்க முடியாதவை. ஆகவே. அதன் தாக்கத்தைக் குறைக்கவே சர்வதேச அளவில் ஏறக்குறையே எழுபது ஆண்டுகளாக சில கட்டுப்பாடுகளை எல்லா ராணுவங்களும் போரின் போது கடைப்பிடித்து வருகின்றன. இலங்கையும் அத்தகைய ஒப்பந்தங்களுக்குக் கைச்சாத்திட்டுள்ளது.

ஆகவே இலங்கை போர் குற்றச்சாட்டுகளைக் கண்டிப்பாக விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். இன்றைய உலகச் சூழ்நிலையில் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் இதே குற்றச்சாட்டுகளை விசாரணை நடத்தி ஆக்கப் பூர்வமான முன்னேற்றங்களைத் தங்கள் செயல்பாட்டில் முறைப்படுத்தி வருகிறார்கள். இந்திய ராணுவமும் தற்போது போரின்போது மனித ராணுவ மீறல்களைத் தவிர்க்க வெளிப்படையான செயல்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.

மேலும் இலங்கை போரின்போது தொடர்ந்து மனித உரிமை மீறல்களைப் பற்றிய குற்றம் குறைபாடுகளை சீர் செய்ய அரசு எடுத்த செயல்பாடுகள் பொது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே போஸ்னியா, குரவேசியா, சூடான், ருவாண்டா, செர்பியா, சியர்ரா லியோன், மற்றும் லைபீரியா நாடுகளில் பிடிபட்ட போர் குற்றவாளிகள் சர்வதேச விசாரணைக்குக் கொண்டு வர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலை உண்டாவதைத் தவிர்க்காமல் இலங்கை அரசு மெத்தனம் காட்டுவது அரசியல் விவேகமோ அல்லது புத்திசாலித்தனமோ அல்ல.

இந்தியா இந்த விஷயத்தில் அதிகம் ஈடுபாடு காட்டாது. அதன் காரணங்கள் இந்திய இலங்கை உறவுக்கு அப்பாற்பட்ட கொள்கை அளவிலான முடிவுகளேயாகும். இதே காரணங்கள்தான் சீனா மற்றும் ரஷ்யா நாடுகளும் ஈடுபாடுகாட்டாமல் தவிர்க்கின்றன.

6) எல்லோராலும் பேசப்படும் சிறிலங்காசீனாஇந்தியா உறவுகள், அதன் எதிர்காலம் என்ன?

சீனா உலகளவில் தனது வலிமையை வணிக மற்றும் பொருளாதார ரீதியில் அதிகரித்து வருகிறது. அதற்கு ஆதரவாக உலகின் பல் வேறு கண்டங்களில் தனது செல்வாக்கைப் பரப்பி வருகிறது. அது போலவே வருங்காலத்தில் தெற்காசியாவிலும் மேலும் மேலும் தனது செல்வாக்கைப் பெருக்கும்.. ஏற்கனவே இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வணிக உறவை ஏற்படுத்துக் கொண்டுள்ளது சீனா. ஆகவே இலங்கை சீனா உறவும் அதிகரிக்கம். அதைத் தவிர்க்க முடியாது. இது இந்தியாவுக்கும் தெரியும்.

வணிகச் செல்வாக்கு பெருகப் பெருக சீனா தனது ராணுவ வலிமையையும் பெருக்கி வருகிறது. முக்கியமாக சீன கடற்படை அடுத்த பத்தாண்டுகளில் இந்தியப் பெருங்கடலில் பலம் வாய்ந்ததாகத் திகழும். இதுதான் இந்தியாவின் கவலையை அதிகரிக்கும் விஷயமாகும். ஏற்கனவே இந்தியப் பெருங்கடலில் இந்திய கடற்படை வலிமையான ஒரு கோளாக இயங்கி வருகிறது. ஆகவே இந்தியாவின் அண்மையில் சீனக்கடற் படையின் தோற்றம் இரு நாடுகளுக்கும் விரிசல் ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலையை அதிகரிக்கும்.

இந்தியாவும் சீனாவும் நேரடியான மோதலைத் தவிர்க்க விரும்புகிறார்கள்.. ஆகவே இந்தியாவும் சீனாவும் தங்களது உறவை சுமுகமாக்க முயற்சிகள் எடுத்துள்ளன. அதே நேரத்தில் இந்தியா தனது அண்மையான நாடுகளில் உறவுகளை வலுப்படுத்தி வருகின்றது. தெற்காசியத் துணைக்கண்டத்தில் சீனாவை எதிர் கொள்ளக்கூடிய திறன் வாய்ந்த ஒரே நாடு இந்தியா. ஆகவே அமெரிக்கா இந்தியாவுடனான உறவை தனது நெடுங்காலப் பார்வையுடன் வலுவடைய முயற்சி எடுத்துள்ளது.

சீனாவுக்கு அந்த வளர்ந்து வரும் உறவு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இந்தியாவின் அண்டை நாடுகளில் தனது உறவுகளைக் கடந்த பல ஆண்டுகளாக சீனா வலுவாக்கி வருகிறது. இவற்றில் பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை முக்கியமானவை.

இந்திய இலங்கை உறவு பல பரிணாமங்களில் தற்போது மிகவும் வலுவடைந்துள்ளது. இதற்கு இரு நாடுகளுக்கும் இடையேயான வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி முக்கிய காரணமாகும். ராஜபக்ச இந்தியாவில் சீனாவைப் பற்றி நிலவிவரும் அச்சத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திவருகிறார் என்றே தோன்றுகிறது. சீனாவுடனான அந்த உறவு எவ்வளவுதான் வளர்ந்தாலும் இலங்கை இந்தியாவின் மிக்க அண்மையில் உள்ள நாடானதால் இந்தியாவின் நிகழ்வுகளால் அதற்கு ஏற்படும் பாதிப்பு எப்போதுமே தவிர்க்க முடியாததாகும்.. ஆகவே சீனஇலங்கை உறவு, இந்தியஇலங்கை உறவைவிட மாறுபட்டது. இந்த இரு உறவுகளும் வெவ்வேறு அடிப்படை மட்டங்களில் வளரும் என்பது என் அனுமானம்.

சீனஇலங்கை உறவு, இந்தியஇலங்கை உறவைவிட மாறுபட்டது. இந்த இரு உறவுகளும் வெவ்வேறு அடிப்படை மட்டங்களில் வளரும்

7) சிறிலங்காவில் போர் இடம்பெற்றபோது தமிழக அரசியல் ஈழத்தமிழரை கைவிட்டுவிட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து உங்களது விமர்சனம் என்ன?

தமிழக அரசியல் ஈழத்தமிழர்களைக் கைவிட்டு இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்கு அரசியல் கலாச்சார சீரழிவும் ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பிறகு ஈழப் போராளிகள் தமிழ் நாட்டில் கொச்சைப் படுத்தப் பட்டதுமே முக்கிய காரணங்கள்.

காமராஜர் பெரியார் அண்ணா காலத்து அரசியிலைத் துறந்து வளர்ந்து வரும் தமிழக அரசியல் காலாச்சாரத்தை ஈழத்தமிழர்கள் புரிந்து கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏமாற்றத்துக்கு இதுவே முக்கிய காரணமாகும். மேலும் ராஜீவ் கொலையால் தமிழ் நாட்டில் ஏற்பட்ட தாக்கத்தை அவர்கள் சரியாக எடை போடவில்லை என்று தோன்றுகிறது. அந்தக் கொலைக்குப் பிறகு ஈழப்போரை ஆதரித்துப் பேச தமிழ் நாட்டின் முதன்மைக் கட்சிகள் முன்வராதது எதைக் காட்டுகிறது?

தமிழ் நாட்டு அரசியல் தேர்தல் அரசியலின் உந்துதலுக்குப் பணம் சேர்க்கும் யந்திரமாக இயங்குகிறது. தேர்வுக்கு வாக்கு சேகரிக்கும் உத்திகளுக்கே அரசியலில் முன்னிடமுண்டு. தேர்தல்கள் வியாபாரச் சாவடிகளாக மாறியுள்ளன. அத்தகைய உத்திகளின் பட்டியலில் ஈழப்பிரச்சினை அடிமட்டத்தில் தள்ளப் பட்டுள்ளது. ஆகவே முதன்மைக் கட்சிகள் ஈழப் பிரச்சினையை கறிவேப்பிலைப போல் தங்கள் ஆதாயத்துக்கு உபயோகிக்கிறார்கள். அவர்கள் அனுதாபம் காட்டுவது கூட அதே குறுகிய நோக்கத்தோடுதான்.

ஆகவேதான் அமைதிப் பேச்சு தொடர்ந்த காலகட்டத்தில் அது வெற்றி அடையவேண்டும் மக்களுக்கு அமைதி தொடற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் ஒருவர்கூட எத்தகைய முயற்சியையும் எடுக்கவில்லை.

ஆகவே ஈழத்து மக்களே தமிழ் நாட்டுத் தலைவர்களை முழுமையாக நம்பக்கூடாது என்றே நான் கூறுவேன். எனது பார்வையில் தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஒட்டு மொத்தமாகத் தெற்காசியாவிலேயே அரசியல்வாதிகள் பாரதி சொன்னது போல் வாய் சொல்லில் வீரம் காட்டுவார்கள். அவ்வளவுதான். அவர்களிடம் ஆக்கப் பூர்வமான செயல்பாடுகளை அதிகம் எதிர்பார்க்காதீர்கள்; அவர்கள் அழகான வார்த்தை ஜாலங்களில் மயங்காதீர்கள் என்று நான் சொன்னால் உங்களுக்குப் பிடிக்காது. ஆனால் அதுதான் யதார்த்தம்.

8) ஈழத்தமிழர் உரிமைப்போராட்டத்தின் இன்றைய நிலை உங்களை பொறுத்தவரை என்ன? சிறிலங்கா அரசு கூறுவதைப்போன்று எல்லோரும் இலங்கையர்கள் என்ற கோட்பாட்டுடன் எதி்காலம் சாத்தியப்படுமா?

இதற்கு விடையாக எங்கே நடக்கிறது போராட்டம் என்றே கேட்கத்தோன்றுகிறது. ஆக்கப் பூர்வமாய், அல்லல் படும் மக்களின் முதல் தேவை அவர்கள் வாழ்க்கை உடனடியாக சீராக வேண்டும். அன்றாடம் காய்ச்சிகளாக வீடின்றி வேலையின்றி இருப்பவர்களுக்கு முதலில் வாழ வழி செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் உரிமையைப் பற்றிப் பேசினால் அவர்களுக்கு நமது பேச்சில் ஈடுபாடு ஏற்படும். இதைச் சில தலைவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். ஆனால் நடைமுறையில் பல குறைபாடுகள் உள்ளன. இதற்கு உரிமைப் பிரச்சினைகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று பொருளல்ல.

போர் முடிந்த பிறகு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. வீரம் மட்டும் போதாது, விவேகம் வேண்டும். தற்போதைய தேவை அரசியல் விவேகமே. தமிழர் உரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க தற்போது போராட்ட முறை எவ்வாறு வெற்றிகாணும் என்பது எனக்கு விளங்கவில்லை.

நான் அரசியல் விமரிசகன் அல்ல. இருந்தாலும் தற்போது உரிமைப் பிரச்சினையை இலங்கையிலும் மற்றும் சர்வதேச அளவிலும் அரசியல் பாதையில் முன்வைக்க வேண்டும். அதற்கு ஒருங்கிணைந்த செயல்பாட்டில் ஈழத்தமிழர்கள் பங்குபெற வழி செய்ய வேண்டும். நடைமுறையில் இயங்கக்கூடிய அடிப்படை செயல்பாட்டை. உருவாக்கி அதை ஒரு குரலுடன் எடுத்து முன்வைக்க தமிழ் தலைவர்கள் தயாரா. இல்லை என்று விசனத்துடன் கூற வேண்டியிருக்கிறது.

9) புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் ஈழத்தமிழர் வாழ்வுரிமை குறித்து முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளின் ஆரோக்கியத்தன்மை குறித்த உங்களது கருத்து என்ன?

ஆரோக்கியம் குன்றிய நிலையிலே உள்ளது என்றே தோன்றுகிறது. முதலில் புலம்பெயர்ந்த தமிழர்கள் கடந்த காலத்தில் தாங்கள் நடந்து கொண்ட வழிமுறைகளை மனக்கண்ணாடியில் பார்த்து புதிய செயலாக்கங்களை உருவாக்க வேண்டும். பழையன கழித்துப் புதியன புகுத்தும் நேரம் வந்து விட்டது.

சென்னைத் தமிழில் சொன்னால் கட்டைப் பஞ்சாயத்து அணுகுமுறை கைவிடப்படவேண்டும். ஆரோக்கியமான .ஜனநாயகமுறையைப் பின்பற்ற வேண்டும். நல்ல முயற்சிகளை சிலர் எடுத்து வருகிறார்கள் அது வரவேற்கத் தக்கது. அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

மாற்றுக் கருத்துக்களை கூறுபவர்களை துரோகி என்றும் விபீடணன் என்றும் வர்ணிப்பதில் காழ்ப்புணர்ச்சியே அதிகரிக்கும்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யும் முயற்சிகளை இலங்கையில் வாழும் தமிழர்கள் எவ்வாறு எதிர் கொள்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம். புலம்பெயர்ந்த தமிழர்களின் செயல்பாட்டின் விளைவுகளை அவர்களே அனுபவிக்கிறார்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் ஈழத் தமிழர் பிரச்சினைகளுக்கு இந்தியாவையும் தமிழ்நாட்டுத் தலைவர்களையும் சாடுகிறார்கள். விமரிசனம் வரவேற்கத்தக்கதே. ஆனால் வரைமுறை இல்லாமல் சாடுவது பயனற்றது. அதனால் இந்தியாவில் தமிழர் பிரச்சினைகளில் உண்மையான அனுதாபதத்துடன் உள்ளவர்கள் எடுக்கும் முயற்சிகளை எவ்வாறு பாதிக்கும் என்று அப்படிச் சாடுபவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஒரே ஒரு வாக்கியத்தில் சொன்னால் வெற்றுப் பேச்சு போதாது, பயனுள்ள செயல்பாடுகளே தேவை.

நன்றி: ஈழநேசன் நியூஸ்

http://www.4tamilmedia.com/ww1/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-04-00/7097-colhariharan-interview-about-future-sri-lanka?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+4tamilmedia-feeds+%284tamilmedia+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29