ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சிறிலங்க வென்றது எப்படி?
மனித உரிமை ஆர்வலர் முனைவர் வி. சுரேஷ்
ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சிறிலங்க அரசிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட மனித உரிமை தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு, அந்நாடு தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது எப்படி? என்ற கேள்விக்கு விரிவாக விடையளித்துள்ளார் மக்கள் சமூக உரிமை கழகத்தின் தமிழகத் தலைவர் முனைவர் வி. சுரேஷ். உணவு பாதுகாப்பிற்கான உச்ச நீதிமன்றத்தின் ஆணையருக்கு ஆலோசகராகவும், மத்திய சட்டம், கொள்கை மற்றும் மனித உரிமை ஆய்வு அறக்கட்டளையின் உறுப்பினராகவும் உள்ளார். அவரோடு தமிழ்.வெப்துனியாவின் நேர்காணல்.தமிழ.வெப்துனியா.காம்: இலங்கையில் தற்போது நடந்து வரும் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், நடந்து முடிந்த இறுதிப் போர் என்று சொல்லப்பட்ட மோதிலில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை என்று ஐநாவின் மனித உரிமை மன்றத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை ஐ.நா. மன்றத்திலேயே கூறினார். அவர் கூறியதன் அடிப்படையில் ஆழமான விவாதம் நடந்து இலங்கையில் நடந்த மனித உரிமை மற்றும் போர் மீறல்கள் என்ன என்பது பற்றி தெளிவாக விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 26, 27ஆம் தேதிகளில் நடந்த அந்த கூட்டத்தில் அப்படி எதுவும் விவாதிக்கப்படாதது மட்டுமின்றி, சிறிலங்க அரசே கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எப்படி, எதனால் என்ற கேள்வியும், ஏன் அவ்வாறு நிகழ்ந்தது என்ற சந்தேகமும் பொதுவாக மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் உள்ளது. இதனை நீங்கள் விரிவாக விளக்க வேண்டும்.முனைவர் வி. சுரேஷ்: 26, 27ஆம் தேதி ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில், உச்சக்கட்ட அரசியல் அதாவது ஆங்கிலத்தில் ஹைலெவல் பாலிடிக்ஸ் என்று சொல்வார்களே அதுதான் நடந்துள்ளது.
webdunia photo
FILEபல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். ஆனால் அந்த இறப்பே கண்துடைப்பாக மாற்றப்பட்டுள்ளது. இதில் ஒரு சில உண்மைகள் வெளிவருகின்றன. எப்படி ஒரு அரசாங்கம், தங்களுக்கு எதிரான தீவிரவாதத்தின் மீது போரை முன்னெடுத்துச் செல்கிறார்கள், அங்கு இருக்கக் கூடிய பிரச்சினைகளை போர் என்ற கண்ணோட்டத்திலும், தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி மறைப்பது எப்படி என்பதையும் செய்து காட்டினர்.வெறும் ஆயுதங்களை மட்டும் பயன்படுத்தாமல், போரில் சம்பந்தப்படாதவர்களையும் (அப்பாவி மக்களையும்) எப்படி ஒரு போர் வடிவத்தில் அவர்களையும் போருக்குள் கொண்டு வந்தார்கள், எவ்விதமான தந்திரத்தைக் கையாண்டார்கள் எனபதை இலங்கையில் நடந்த போரின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.இலங்கையில் தற்போது இருக்கக் கூடிய அரசாங்கம் மிகக் கொடூரமானது. நம்மை எல்லோரையும் விழுங்கிவிட்டார்கள். ஆள் பலம், படை பலம் இருக்கிறது. பிரச்சாரத்தின் மூலம் பல்வேறு சுலுகைகளையும் பெற்றார்கள். மனித உரிமை அமைப்பாளர்களை வெளியேற்றுதல் போன்றவற்றை ஒவ்வொன்றாகச் செய்தார்கள். ஜெனிவாவில் நடந்த விஷயங்களை இந்த பின்னணியில்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு அரசாங்கம், தன்னைப் பற்றியே பாராட்டிக் கொண்டு வந்த தீர்மானத்தை சாதாரணமாக யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தன்னைப் பற்றி தானே புகழ்ந்து கொள்வதை யார்தான் ஏற்றுக் கொள்வார்கள்? ஆனால், அப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, தான் மட்டுமல்லாமல், 25 நாடுகள் இதனை முன்மொழிந்து தீர்மானத்திற்கு ஆதரவு பெற்றுள்ளனர் என்றால், யார் யாரை முட்டாளாக்கிவிட்டார்கள் என்று புரியவில்லை.அங்கு நடந்த மாபெரும் மனிதப் பேரழிவைப் பற்றி கூறியது உண்மையா அல்லது அங்கு ஒன்றுமே நடக்கவில்லை, ஒருவர் கூடக் கொல்லப்படவில்லை, மிக அழகாக போரை நடத்தினோம் என்று கூறுவது உண்மையா என்று புரியவில்லை.சில நேரத்தில் நமக்கே குழப்பமாகிவிடுகிறது. அந்த அளவிற்கு தந்திரமாகவும், சிறப்பாகவும் ஒரு செயலை அவர்கள் செய்து முடித்துள்ளனர்.இதைத்தான் நாம் அவசியமாகப் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் சிறிலங்க அரசு மேற்கொண்டது போன்ற ஒரு போர் நடவடிக்கையை, ஆசியாவில் இருக்கும் நாடுகளும், அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கும் இதே வழியில் பின்பற்றினால் ஒரு பயங்கரமான நிலை ஏற்படும்.இது போன்றதொரு நிலைமை பாகிஸ்தானிலும் நிலவுகிறது. பாகிஸ்தானில் பலுச்சி மக்கள் வாழும் பகுதியில், நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல பலுச்சி மக்கள், நாங்கள் தனியே போக வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
எப்படி இலங்கையில் தமிழர்கள் கூறி வருகின்றனரோ அதைப்போன்ற பிரச்சினைதான் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் நிலவுகிறது. கிழக்கு நேபாளத்திற்கும், மேற்கு நேபாளத்திலும் இதே நிலை நிலவுகிறது. பங்களாதேஷில் சிட்டகாங் பிரச்சினை உள்ளது. அங்கு ரிகாங் பழங்குடியினரும் இதுபோன்ற பிரச்சினையில் ஈடுபட்டு வருகின்றனர்.நமது இந்தியாவிலும் வடக்கு பகுதியில் இதுபோன்ற பல பிரச்சினைகள் உள்ளன. மணிப்பூர், நாகாலாந்து, அசாம் என பல இடங்களில் இப்பிரச்சினை உள்ளது.இதுபோன்ற பிரச்சினைகளுக்கு, இலங்கையில் நடந்தது போன்ற (போர்) மாதிரியான தீர்வை நோக்கி சென்றால் என்னவாகும் என்பதுதான் அடுத்த கவலைக்குரிய விஷயமாகும்.இலங்கையில் 3 முறைகளைக் கையாண்டார்கள். ஒன்று பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று 9/11க்கு பிறகு உருவாகிய ஒரு சூழ்நிலையை இவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். விடுதலைப் புலிகள் என்பவர்கள் தீவிரவாதிகள். அவர்கள் தமிழர்கள் என்பதால், எல்லா தமிழர்களுமே தீவிரவாதிகள்தான். அவர்களை நம்ப முடியாது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று கூறி 2006ஆம் ஆண்டே தாக்குதலைத் தொடங்கிவிட்டனர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையை வைத்துக் கொண்டு அவர்கள் கையாண்ட சில அரசியல் போக்குகளை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.போருக்குப் பின்னால் நடந்த அரசியல் தந்திரங்களை மூன்று நடவடிக்கைகளாகப் பிரிக்கலாம். ஆகஸ்ட், 2006ஆம் ஆண்டுதான் இலங்கை போர் 4 என்று ஆரம்பித்தனர். இது டிசம்பர் 2008 வரையான காலகட்டம். அடுத்து, ஜனவரி 2009 முதல் ஏப்ரல் 2009 வரையான காலகட்டம். அது போரின் உச்சக்கட்டம். கடைசி பாகம் ஏப்ரல் 14, 15ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை. அப்போதுதான் பிரபாகரனை நாங்கள் கொன்றுவிட்டோம். போர் முடிந்தது என்று அவர்கள் அறிவித்தார்கள். இன்று மூன்று காலக்கட்டத்தையும் நாம் பார்க்க வேண்டியது அவசியம். இந்த மூன்று காலகட்டத்தையும் பிரித்து அந்த காலக்கட்டத்தில் என்ன நடந்தது, அப்போது இலங்கை அரசின் வழிமுறைகள் என்ன என்று பார்க்கவில்லை என்றால், வரலாற்று ரீதியாக நாம் தவறு இழைத்துவிட்டதாக ஆகிவிடும்.அது புரியாமலே நாம் ஒரு நிலையை எடுத்துவிட்டால், என்ன நடந்தது என்று தெரியாமல் போய்விடும் என்பதோடு, இதனை எதிர்ப்பதாக இருந்தால் எப்படி எதிர்ப்பது என்பதும் தெரியாமல் போய்விடும்.ஆகஸ்ட் 2006 முதல் டிசம்பர் 2008 வரையிலான காலகட்டத்தைப் பார்ப்போம். அப்போதுதான் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரைத் துவக்கினார்கள். சிறிது சிறிதாக போரை துவக்கி பெரிய அளவில் கொண்டு வந்தனர்.இலங்கை முழுவதுமே ஒரு அவசர நிலை பிரகடனப்படுத்தியது போன்ற நிலையை கொண்டு வந்தனர். எங்கு பார்த்தாலும் காவலர்கள், ராணுவத்தினர் நிறுத்தப்பட்டனர். தமிழர்கள் சித்ரவதை, ஆள் கடத்தல், காணாமல் போவது, வெள்ளை வாகன ஆள் கடத்தல் போன்றவை நிகழ்ந்தது. அப்போது ஒரு விஷயத்தை மட்டும் அவர்கள் தெளிவாக செய்தனர்.முன்பு செய்த தவறுகளை மாற்றிக் கொண்டனர். உதவி செய்யும் அமைப்புகளான, ஆசிய மேம்பாட்டு வங்கி, உலக வங்கி, ஜப்பான் போன்ற நிதி உதவி அளிக்கும் அமைப்புகளுக்கு, ஜனநாயகம் என்பது ஒரு தேவையான சொல். அந்த சொல்லுக்கான ஒரு நாடகத்தை வெளியில் இருந்து செய்துவிட்டனர். அவர்களுக்கு ஜனநாயகம் என்பது பேரளவில் இருந்தால் போதும், நாட்டிற்குள் அப்படி ஒரு நிலை நிலவுகிறதா என்பதை எல்லாம் அவர்கள் பார்க்க மாட்டார்கள். மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். இலங்கை அரசும், இவர்களுக்கு ஒரு நாடகத்தை நடத்திக் காட்டிவிட்டது. இவர்களிடம் நிதியைப் பெற அதுவே போதும் என்று எண்ணியது.அதனால் ஜனநாயகத்தை அப்படியே பாதுகாத்தார்கள். தேர்தல், சட்டம், காவல்துறை போன்றவற்றை அப்படியே வைத்துக் கொண்டு, உள்ளே மட்டும் ராணுவ ஆட்சியைப் போன்று நடத்தி வந்தனர்.காவலர்கள் யாரை வேண்டுமானாலும் பிடித்துச் செல்லாம், அடிக்கலாம், கொலையும் செய்யலாம். ஜனநாயகத்தின் அடிப்படையே சட்டத்தின் ஆட்சி என்பதாகும். அதில், நீதிமன்றம், காவல்துறை, நாடாளுமன்றம், அரசு அமைப்பு என எல்லாமே தனித்தனியாக இருக்க வேண்டும். இவை எல்லாமே சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும். மூன்றாவது யாருமே சட்டத்திற்கு மேல் கிடையாது. எல்லோருமே சட்டத்திற்குக் கீழ்தான் என்பது. இங்கு என்ன நடந்தது என்றால், மேலோட்டமாக ஜனநாயகம் என்று வைத்துக் கொண்டு, உள்ளிருக்கும் அமைப்புகளை ஒவ்வொன்றாக உடைத்து சர்வாதிகாரத்தைக் கொண்டு வந்தனர்.
அதற்கு ஒரு அத்தாட்சியாக, நம் நாட்டில் 40, 50 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யும்போது, அங்கு 200 ரூபாய்க்கு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பெட்ரோல் விலையை உயர்த்தியது தவறு என்று தீர்ப்பளித்தார். உடனடியாக அவர் மிரட்டப்பட்டார்! இதுபோன்ற தீர்ப்புகளைக் கூறிக் கொண்டிருந்தால் நீ உயிருடன் இருக்க மாட்டாய் என்று அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கே இந்த நிலைமை என்றால், மற்றவர்களின் கதி என்ன வென்று சொல்லவே வேண்டாம்.இப்படித்தான் ஒவ்வொருத் துறையிலும் மிகவும் கூர்மையாக அமைப்புகளை உடைத்தெறிந்தனர். காவல்துறைக்கும், ராணுவத்திற்கும் முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறப்பட்டது. இது உச்சக்கட்டத்திற்கு போனது.
webdunia photo
WDஇது பற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், ஐ.நா.வில் கூறியது என்னவென்றால், ஒரு 10 போலிஸ்காரர் இருந்தால், அதில் 3 பேர் ரவுடிகள் போல செயல்படுகிறார்கள். அவர்களால்தான் மற்ற காவல்துறைக்கும் கெட்ட பெயர் வருகிறது என்று பொதுவாக கூறுவார்கள். இவர் சிறிலங்காவில் பல முகாம்களுக்கும், பல இடங்களுக்கும் சென்றுவிட்டு என்ன சொல்கிறார் என்றால், இந்த மாதிரியான சித்ரவதை செய்யும், சட்ட மீறல் செய்யும் காவலர்கள் குறைந்தபட்சமாக இல்லை. அவர்கள்தான் அதிகபட்சமாக இருக்கிறார்கள். அதாவது 10இல் 7 பேர் இருக்கிறார்கள். எனவே, ஏதோ ஒரு சில காவலர்கள் இப்படி செய்து விட்டார்கள் என்று ஒதுக்க முடியாது, ஏறக்குறைய அனைத்து பேருமே அங்கு அப்படித்தான் உள்ளனர் என்று கூறியுள்ளார். இதை நான் சொல்லவில்லை, ஐ.நா.வால் அமர்த்தப்பட்ட அதிகாரி திட்டவட்டமாகச் சொல்கிறார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தெளிவாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்.ஜனநாயகப் போர்வையில் அங்கு ஒரு ராணுவ ஆட்சி அங்கு நடந்து கொண்டிருக்கிறது. 2006ஆம் ஆண்டு முதல் இந்த நிலைதான் அங்கு நிலவிக் கொண்டிருக்கிறது. அங்குள்ள மக்களை கடத்திச் செல்வதும் கொல்வதும் மிகவும் சாதாரணமாக நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதுபோன்று கொல்லப்பட்டுள்ளனர்.கொழும்புவில்தான் இது அதிகமாக நடக்கிறது. ஒரு நான்கு பேர் ஒரு இளைஞரைக் கடத்திச் சென்று கொன்று விடுவார்கள். இதனால், மற்றவர்களுக்கு, நாளைக்கு நமக்கும் இந்த நிலைதான் என்ற பயம் வரும், இதனால் சமுதாயமே ஒரு அச்சத்திற்குள்ளாகியுள்ளது.இது ஒரு அரச பயங்கரவாத நிலையாகும். அரசே ஒரு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு, மக்களை பயந்த நிலையிலேயே இருக்க வைப்பதான முறையாகும்.இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தமிழர்களை மட்டும் இவர்கள் தாக்கவில்லை. தமிழர் அல்லாதவர்களும் இந்த தாக்குதலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். சிங்களர்கள், அதாவது சிங்கள பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், சங்கங்களைச் சேர்ந்தவர்கள், அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மறைந்து போய்விடுவார்கள். சிங்களர்கள் பலர், தமிழர்களின் நியாயமான கோரிக்கைக்கு வழி காண வேண்டும், அது வன்முறை மூலமாகவோ, ராணுவத்தின் நடவடிக்கை மூலமாகவோ முடியாது. அரசியல் தீர்வைத் தான் காண வேண்டும் என்று முன் வைத்தவர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த காலக்கட்டத்தில் 20 பத்திரிக்கையாளர்கள் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள். மற்றவர்கள் சிங்களவர்கள். எனவே இந்த ஆட்சி தமிழர்களுக்கு மட்டும் எதிரான ஆட்சி அல்ல, ஒரு சர்வாதிகார ஆட்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,1988, 1989ஆம் ஆண்டுகளில், ஜே.வி.பி. ஆட்சி நடந்த போது 40,000 பேர் ராணுவத்தினரால் நடு ரோட்டில் தூக்கிலிடப்பட்டனர். பெளத்த சமுதாயத்தைச் சேர்ந்த இலங்கை அரசு, தன்னுடைய மக்கள் 40,000 பேரையே கொன்று குவித்துள்ளதே, அது தமிழர்களைக் கொல்வதில் ஏதாவது ஆச்சரியம் உள்ளதா? வன்முறையில் ஊறிய ஒரு ஆட்சி, ராஜபக்சே மட்டுமல்ல, அதற்கு முந்தைய ஆட்சியாளர்களும் அப்படித்தான் இருந்துள்ளனர்.முன்பொரு காலத்தில், இலங்கையில் 5,000 பேரைக் கொன்ற வழக்கை ஐ.நா. முன்பு கொண்டு சென்றவர் ராஜபக்சே. தானே ஆய்வு செய்து, ஆதாரங்களைத் திரட்டி ஐ.நா.வில் வழக்குத் தொடர்ந்தவர். அப்போது, ஐ.நா.வின் பார்வை எப்படி இருக்கும், ஐ.நா.வின் நடவடிக்கை எப்படி இருக்கும், அவர்களது கண்ணோட்டம் என்ன என்பது எல்லாமே தெரியும், அதனால் இவர் ஆட்சிக்கு வந்த பிறகு, ஐ.நா.வை எப்படி சரிகட்டுவது என்று சரியாக கணித்து ஒவ்வொரு காரியத்தையும் செய்துள்ளார்.
தமிழ்.வெப்துனியா: ஐ.நா.வில் சுவிட்சர்லாந்து கொண்டு வந்த தீர்மானத்தில், எல்டிடிஇ எனப்படும் பயங்கரவாத அமைப்பை நிர்மூலம் செய்துவிட்டீர்கள். அதற்கு பாராட்டுகள், அங்கு ஏதேனும் மனித உரிமை மீறல்கள் நடந்திருக்குமேயானால், ஏதாவது போர் குற்றம் நடந்திருக்குமேயானால், அதற்கு சிறிலங்க அரசு விசாரணை நடத்தி, குற்றத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று ஒரு சாதாரண தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனரே?சுரேஷ்: முதலில் இந்த கூட்டத்தை கூட்டியதே ஜெர்மனிதான். அதன் உரையிலும் முதலில் விடுதலைப் புலிகளை தாக்கிப் பேசிவிட்டுத்தான் தனது உரையை துவக்கியது. எல்டிடிஇ- அமைப்பினரும் சில அத்துமீறல்களை செய்துள்ளனர், அதை மறுப்பதற்கில்லை. ஆனால், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை விடுதலைப் புலிகளின் பிரச்சினை என்று கூறுவது வரலாற்றுத் தவறு. அதாவது விடுதலைப் புலிகள் என்பது தமிழர்களின் முக்கிய அங்கம். ஆனால் அவர்களையும் மீறியதுதான் தமிழர்கள் பிரச்சினை.கடந்த 20, 30 ஆண்டு கால தமிழர்கள் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் ஒரு முக்கிய அமைப்பாக இருந்துள்ளனர். தமிழர்களைப் பற்றிய தவறான பிரச்சாரத்தின் மூலம், அவர்களைப் பற்றிய எண்ணத்தை மாற்றினர். தமிழர்களா... அவர்கள் வீணாக வன்முறைக்குப் போவார்கள் என்று எண்ண வைத்தனர். அதுதான் அவர்களது முதல் வெற்றி. இதனை தமிழக மக்கள் புரிந்து கொள்ளவில்லை. வெறும் மேடைப் பேச்சில் மட்டுமே தங்களது திறனைக் காட்டினர். இதனை எதிர்க்கக் கூடிய அமைப்பை நாம் உருவாக்க வில்லை. இது ஒரு கசப்பான உண்மை.தமிழகத்தில் உள்ள அமைப்புகள், இலங்கைப் பிரச்சினையை கொண்டு போன முறையில் தவறு உள்ளது என்பதை நிச்சயமாகச் சொல்லாம்.தமிழ்.வெப்துனியா: விடுதலைப் புலிகளும் சரி, இலங்கை அரசும் சரி பல விதிகளை மீறி மனித உரிமை மீறல்களை செய்துள்ளன. ஆனால், இதுபற்றி எதையும் விசாரிக்காமல், இலங்கை அரசு மனித உரிமையை நிலைநாட்டியுள்ளது, இந்த பணி மேலும் வளர வேண்டும் என்று பாராட்டி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எந்த அடிப்படையில் நியாயமானது?சுரேஷ்: முதலில் இலங்கை அரசாங்கம் இந்த பிரச்சினையை எவ்வாறு கொண்டு போயுள்ளது என்றால், இந்த நாடுகள் அனைத்தும் ஏற்கனவே வெள்ளைக்காரர்களின் ஆட்சியில் இருந்தவை. இழந்த இப்பகுதிகளை மீண்டும் பிடிக்க வெள்ளைக்காரர்கள் செய்யும் சதி தான் இந்த நடவடிக்கை என்பது போல, இலங்கைப் பிரச்சினையை முன் கொண்டு வந்தனர். இதனால், லத்தீன் அமெரிக்க நாடுகள், கியூபா, வெனிசுலா, பொலிவியா போன்ற நாடுகள், கொஞ்சம் கூட யோசிக்காமல், இலங்கை அரசு சொன்னதை நம்பினார்கள்!மேலும், இலங்கை அரசு உலக பத்திரிக்கையாளர்களை தன் வசம் கொண்டு வந்துவிட்டது. இதனைத்தான் தமிழ் அமைப்புகள் தடுக்கத் தவறிவிட்டன. உலக பத்திக்கை அமைப்பை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை.இதனால், இலங்கை அரசு சொல்வதுதான் அவர்களுக்கு முக்கியம். இலங்கையில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவில்லை. “விடுதலைப் புலிகள் என்பவர்கள் பயங்கரவாதிகள். பயங்கரவாத குழுவை அடக்குவது முக்கியமானது. இது வளரும் நாட்டின் முக்கியக் கடமை. வளரும் நாட்டிற்கு எப்போதும் வளர்ந்த நாடுகள் தடைகளைக் கொடுப்பார்கள். வளரும் நாடுகள் எதைச் செய்தாலும், அதற்கு வளர்ந்த நாடுகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆகையால் இந்த சூழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது நமது கடமை” என்று கூறி கியூபா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்தன.இதுபோன்ற சிறிய நாடுகள் ஆதரவு தெரிவித்ததை விட, சீனா, பாகிஸ்தான் போன்ற பெரிய நாடுகளும் அதனை ஆதரித்தது முக்கியக் காரணம். இந்தியாவின் ஆதரவும் ஒன்று. இந்தியா சொன்னா சரியாக இருக்கும் என்று மற்ற நாடுகளும் நம்பின. இதனால் (சிறிலங்காவிற்கு) ஒரு பலம் கிடைத்தது. இதை அறிந்த நாம், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு, உண்மை நிலவரத்தை விளக்கி தகவல்களை அனுப்பினோம். நீங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தது வேதனையை அளிக்கிறது என்று கூறியிருந்தோம். அதைப் படித்த பத்திரிக்கையாளர்களில் முக்கியமானவர்கள் கூட, இதில் ஒரு பகுதி கூட எங்களுக்குத் தெரியாதே, இதனை ஸ்பானிஷ் மொழியில் மொழி பெயர்த்து தர முடியுமா என்று கேட்டு, அதை பல நாட்டு அமைப்புகளின் மூலம் இரண்டு கடிதங்கள் மட்டும் மொழி பெயர்க்கப்பட்டு யுகேஷியாவின் அரசியல் தலைவருக்கு அனுப்பப்பட்டது. அதைப் படித்துப் பார்த்துவிட்டு அவர்கள் பதில் அனுப்பியிருந்தார்கள், இதுபோன்ற ஒரு நிலை அங்கு இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாதே, தெரிந்திருந்தால் நிச்சயம் நாங்கள் இலங்கையைக் கேள்வி கேட்டிருப்போம் என்று கூறினார்கள். ஆனால் அதற்குள் காலம் கடந்து விட்டதே...